- மதுரை எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்மதுரை தமுக்கம் மைதானத்தில் அ.தி.மு.க., மாநாடு மற்றும் கட்சிக்கு நிதி சேர்த்தல் நிகழ்ச்சி 1974ல் நடந்தது. அப்போது, மத்திய அரசு சுற்றுலா மாளிகையில் (தற்போதைய சங்கம் ஓட்டல்) தங்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.,
"எம்.ஜி.ஆரை சந்திக்கலாமா?' என்று, வெளியே இருந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர் சபாபதியிடம் கேட்டதற்கு, "அதனாலென்ன, தலைவர் ப்ரீயாக தான் உள்ளார். போய் பேசுங்கள்!' என்றார்.
தொப்பி, கண்ணாடி இல்லாமல், முண்டா பனியன் மற்றும் கைலியுடன், தோளில் ஒரு வெள்ளை டர்க்கி டவல் அணிந்து, இரு தலையணை களை மடியில் வைத்தவாறு வெகு கேஷுவலாக அந்த அறையில் அமர்ந்திருந்தார் எம்.ஜி.ஆர்., உள்ளே சென்றவுடன், "வணக்கம்' சொல்லி, அவர் எதிரில் அமர்ந்தேன். கட்சி ஆரம்பித்த நேரத்திலிருந்து அவரிடம் தனியாக சிறப்பு பேட்டி வேண்டும் என அடிக்கடி கேட்டு வந்தேன். "பிறகு பார்க்கலாம்!' என்று தட்டிக் கழித்துக் கொண்டே வந்தார். அப்போது நல்ல மூடில் இருந்த எம்.ஜி.ஆரிடம், "உங்களிடம் சில கேள்விகள் நான் கேட்கலாமா?' என்றேன்; அவரும், உடனே, "கேளுங்கள்...' என்றார். கொண்டு போயிருந்த டேப்-ரிகார்டரை ஆன் செய்து, எம்.ஜி.ஆரிடம் ஒரு கேள்வி கேட்டேன்.
அன்றைய நிலையில், எம்.ஜி.ஆரை, மதுரை முத்து மற்றும், "சோ' ஆகியோர் தரக்குறைவாக தாக்கி பேசுவது பற்றி சிக்கலான ஒரு கேள்வியைக் கேட்டவுடன், அதற்கு பதில் சொல்லாமல், என்னிடம் இருந்த டேப்-ரிகார்டரை வாங்கி தன் மடியில் வைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., அதில் இருந்த ஸ்டாப் பட்டனை அழுத்தி, நிறுத்திய பின், என்னிடம், "ஊம், கேளுங்கள்...' என்றார்.
நானும் விடாமல், "ஏன் டேப்-ரிகார்டரை ஆப் செய்தீர்கள்?' என்றேன். "பேட்டி முடிந்த பின் கூறுகிறேன்...' என்றார்.
அரைமணி நேரம் பேட்டி; சளைக்காமல் பதிலளித்தார் எம்.ஜி.ஆர்., அதன் பின் டேப் வேண்டாம் என்றதற்கு நீண்டதொரு விளக்கம் கொடுத்தார்:
நாம் இவ்வளவு நேரம் பேட்டியில் எவ்வளவோ விஷயங்கள் பேசினோம். அது முழுவதும் பத்திரிகையில் வரப்போவதில்லை. குறிப்பிட்ட முக்கிய விஷயம் தவிர, தேவையில்லாத சில சர்ச்சைக்குரிய விஷயங்களும் பேசி உள்ளோம். அது, "ஆப் த ரிகார்ட்' ஆகும்-நமக்குள் பேசிக் கொண்டது. அது பத்திரிகையில் வெளிவந்தால், வீணான பிரச்னை ஆகும். ஆகவே, டேப்-ரிகார்டரில் பதிவாகாமல் இருப்பது நல்லது என்பதாலேயே வேண்டாம் என கருதி நிறுத்தினேன் என்றார்.
அரசியலில் தீவிரமாக எம்.ஜி.ஆரை எதிர்த்த மதுரை முத்து, பின்னாளில் தி.மு.க.,வை விட்டு விலகினார். தன் எதிரியாக நினைத்த எம்.ஜி.ஆரை ஆளுயர மாலை, பூச்செண்டுடன் சந்தித்து அ.தி.மு.க.,வில் சேர்ந்தார்.
தன்னை நம்பி வந்த மதுரை முத்துவுக்கு மீண்டும் மேயர் பதவி அளித்து கவுரவித்தார் எம்.ஜி.ஆர்., இப்படி பின் விளைவுகளை எதிர்பார்த்து அதற்கேற்றவாறு தன் நடவடிக்கைகளை வைத்துக் கொண்டதால் தான் யாரும் அவர் மீது குறை கூற முடியாதவாறு ஆயிற்று.
சினிமாவில் வீர, தீர செயல்களுக்கு டூப் போட்டு எடுப்பதை அறிவோம். ஆனால், பொதுமக்கள் முன் தைரியமாக, துணிச்சலுடன் செயல்படுபவர் எம்.ஜி.ஆர்., என்பதை அவரது கட்சி பிரசார சுற்றுப்பயணத்தின் போது பலமுறை நேரில் பார்த்துள்ளேன்.
முதல்வரான பின்பும் நடைபெற்ற ஒரு சம்பவம்... பெரியார் நூற்றாண்டு விழா என்று நினைக்கிறேன். மதுரையில், அரசு சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. நான்கு மாசி வீதிகளில் முக்கிய இடமான தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி சந்திப்பில் அமைந்திருந்த மேடையில் இருந்து, ஊர்வலத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்., மேடையில் எம்.ஜி.ஆருடன் அப்போதைய கலெக்டர் சிரியாக் மற்றும் உயரதிகாரிகள் இருந்தனர்.
ஊர்வலம் சென்று கொண்டிருக்கும் போது இடையில் கையில் மனுக்களுடன் மேடை அருகே நின்று கொண்டிருந்தனர் சிலர். அருகிலிருந்த காவல் துறையினர், அவர்களை ஒதுக்கப் பார்த்தும் போக மறுத்துவிட்டனர். "சரி, மனுக்களையாவது கொடுங்கள்; முதல்வரிடம் சேர்த்து விடுகிறோம்!' என்று கேட்டுப் பார்த்தும் பயனில்லை.
அவர்கள் தொடர்ந்து, "எம்.ஜி.ஆரிடம் தான் கொடுப்போம்!' என்று பிடிவாதம் செய்து கொண்டிருந்தனர்.
மேடைக்கு கீழே நடந்த இந்த சலசலப்பை கவனித்த எம்.ஜி.ஆர்., என்னவென்று விசாரிக்க, "உங்களிடம் தான் மனு கொடுக்க வேண்டும் என கூறி, போக மறுக்கின்றனர்!' என்று அதிகாரிகள் சொன்னவுடன், சிறிதும் தயங்காமல், "அவ்வளவு தானே! நானே வாங்கிக் கொள்கிறேன்!' என்று சற்றும் எதிர்பாராதவிதமாக, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மேடை தடுப்பு கம்பியை தாண்டி வந்து, அந்த குறுகலான இடத்தில் மேடை விளம்பில் இருந்து குனிந்தவாறு அவர்களிடம் மனுக்களை வாங்கினார் முதல்வர் எம்.ஜி.ஆர்.,
மேடையில் இருந் தவர்கள் பதறினர், அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்து விடக் கூடாதே என்று; ஆனால், எதைப் பற்றியும் சிந்திக்காமல், மனுக்களை வாங்கியவுடன், மீண்டும் மேடைத் தடுப்பை தாண்டி, பழைய இடத்தில் புன்னகையுடன் நின்ற காட்சியைக் கண்டு, அங்கு கூடியிருந் தவர்கள் கரகோஷம் எழுப்பினர். (அந்த படம் தான் மேலே காண்பது) இப்படி அசாத்திய தைரியத்துடன் செயல்பட்ட முதல்வர் எம்.ஜி.ஆர்., தவிர வேறு யாரேனும் இருக்க முடியுமா என்பது சந்தேகமே.
Thinnai part of Dinamalar "Varamalar" issue dt.18.12.2009ஒரு நடிகன், பல்வேறு குண விசேஷங்கள் உள்ள பாத்திரங்களை ஏற்று நடித்தால் தான் நடிப்பில் பல புதுமைகள் பிறக்க முடியும்; இப்போது நான் அறிமுகமாகியுள்ள அளவுக்கு, அறிமுகமாகாத நிலையில் முன், "என் தங்கை' என்ற படத்தில் நடித்தேன்; அந்தப் படம் வெற்றி வாயிலை எட்டிப் பிடித்த படமும் கூட. அதில் எனக்குச் சண்டைக் காட்சிகள் இல்லை; ஆனால், அது வெற்றி கண்டது.
நாளடைவில், நான் நடிக்கும் படங்களில் சண்டைக் காட்சிகள் இருக்க வேண்டும் என்ற நிலை எப்படியோ நிரந்தரமாக உண்டாக்கப்பட்டு விட்டது. அதற்குப் படத் தயாரிப்பாளர்கள் சொல்லும் காரணம், "உங்களுடைய சண்டைக் காட்சிகளை ரசிகர்கள் முக்கியமாக எதிர்பார்க்கின்றனர்!' என்பது. அது மட்டுமல்ல, வினியோகஸ்தர்கள் அப்படி சொல் கின்றனர் என்பதும் அவர்கள் கூறும் காரணம். சண்டைக் காட்சிகளே கூடாது என்று கூறத் தேவையில்லை. படக் கதைக்குச் சம்பந்தமில்லாத, தேவைப்படாத பகுதிகளில் அத்தகைய காட்சிகள் இல்லாமலிருப்பதை நாங்கள் வரவேற்கவே செய்வோம் என்பதை உணர்த்தவும் வேண்டும்...
ஒரு படத்தைச் சுட்டிக்காட்டி, அது போன்ற காட்சிகள் வேண்டும் என்றும், அது போன்ற கதை, அதைப் போன்ற உரையாடல், அதைப் போன்ற பாட்டு என்று, "ஒன்றைப் போன்ற மற்றொன்று' என்று தேவையற்ற எதிர்பார்ப்பில் ரசிகர்களின் ரசனைத்திறன் ஈடுபடுவது சரியல்ல. வளரும் கலைக்கு வாய்ப்பூட்டு போடுவதாகும் இது...
அடுத்தது, காதற்சுவை. சாதாரணமாகப் பாட்டு பாடிக் காதல் செய்வது என்பது உலகியலில் இல்லாதது. படங்களில் வருவது போன்று பொதுப் பூங்காக்களில் காதல் புரிவதற்கும் நமது சமூகம் அனுமதிக்காது. ஆயினும், நமது படங்களில், வாழ்க்கையில் ஓர் ஆணும், பெண்ணும் எந்த அளவுக்கு நெருங்கிப் பழகுகின்றனர் என்பதையும், அவர்களுக்கிடையே எழும் கருத்துப் பரிமாற்றங்களையும் வெளிப்படுத்தப் பாட்டுக்களாக எடுக்கின்றனர். உவகைச் சுவை, மனித உள்ளத்திற்கு இன்றியமையாதது என்பதற்காக அமைக்கப்படும் இக்காதல் காட்சிகளுக்கு ஒரு எல்லை வகுக்க வேண்டும்...
— "பெற்றால் தான் பிள்ளையா' படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்த எம்.ஜி.ஆர்., அப்படம் வெளியான போது, "பொம்மை'(1967 ஜனவரி) பத்திரிகையில் ....
***
என் நடிப்புத் தொழிலில் நான் எந்த வழியைப் பின்பற்றுவது என்று புரியாது குழப்பத்திலிருந்த அந்த நேரத்தில் தான், நடிகவேள் எம்.ஆர்.ராதா அண்ணன், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிக்கு நடிகராக வந்தார். தன்னை நல்லதொரு நடிகனாக ஆக்கிக்கொண்ட பின்தான், அந்தக் கம்பெனிக்கு வந்தார். அவருடைய சமயோசித அறிவும், எந்த வேடத்தைப் போட்டாலும், அது சிறிய வேடமானாலும், பெரிய வேடமானாலும், உரையாடல்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சரி, அந்த வேடத்தை எம்.ஆர்.ஆர்., ஏற்றுக்கொண்டார் என்றால், அதுபோதும்; அந்தப் பாத்திரத்திற்குத் தனித்தகுதி ஏற்பட்டுவிடும்.
என் நாடக வாழ்க்கையில், எம்.ஆர்.ஆருடைய நடிப்பை நாடகத்தில் காணவும், அதே நாடகங்களில், நானும் நடிக்க கிடைத்த நாட்கள் குறைவாயினும், எனக்கு அது ஒரு காலகட்டமாகவே இருந்தது. கஷ்டகாலமல்ல, காலகட்டம்.
என் நடிப்புலகில், எனக்குப் பெரிய,புதிய ஒரு திருப்பத்திற்குக் காரணமாயிருந்தது ஒரு காலகட்டம் என்றால், அது மிகையாகாது. அந்தத் திருப்பத்திற்கு ஓரளவில் எம்.ஆர்.ஆரும் காரணமாயிருந்தார் என்பதைச் சொல்வதில், நான் பெரிதும் மகிழ்ச்சியே அடைகிறேன்.
— "நான் ஏன் பிறந்தேன்' நூலில் எம்.ஜி.ஆர்.,